Search

வெண்பூசணி (Ash Gourd in Tamil)


வெண்பூசணியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உடல் வெப்பத்தை வெல்வதற்கும், சிறப்பான சக்தியை உடலில் அனுபவிப்பதற்கும் ஒரு எளிய வழி! சாலடுகள், பழச்சாறுகள், பதார்த்தங்கள் மற்றும் இனிப்புகளுக்கும் கூட சுவைகூட்டுவதற்கு வெண்பூசணியைச் சேர்க்கலாம். நம்ப முடியாத வகையில் பல்வேறு பலன்களை வழங்கக்கூடிய வெண்பூசணிக் காய், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு பெரும் பட்டியலைக் கொண்டுள்ளது. இந்த நன்மைகளைப் பற்றி மேலும் அறிக மற்றும் கீழே உள்ள ஏராளமான வெண்பூசணி பதார்த்தங்களையும் செய்து சுவைத்து அனுபவியுங்கள்.



வெண்பூசணி (Ash gourd in Tamil) என்றால் என்ன?


பெனின்கசா ஹிஸ்பிடா என்ற தாவரவியல் பெயர் கொண்ட வெண்பூசணிக் காய் (Ash gourd vegetable in tamil), பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவில் உண்ணப்படும் ஒரு தனித்துவமான பூசணிக்காய் வகை. இது பெரும்பாலும் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு ஆசிய சமையலில் சூப்களில் சேர்க்கப்படுகிறது. இருப்பினும், இந்திய யோகிகள் நீண்ட காலமாக வெள்ளைப் பூசணியை மிகவும் இயற்கையான உத்வேகம் தரும் உணவுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். ஏனெனில், யோக விஞ்ஞானத்தில் “ப்ராணா” அல்லது பிரதான உயிர்சக்தி என்று குறிப்பிடுவதை வெண்பூசணி அதிக அளவில் கொண்டுள்ளது.

வெண்பூசணி பல்வேறு பொதுவான மற்றும் பிராந்திய பெயர்களால் அறியப்படுகிறது ..

  • வெள்ளைப் பூசணி விண்ட்டர் மெலன் வேக்ஸ் கார்ட் குஷ்மண்டா, ப்ரிஹட்பலா, க்ரினவஸா, கிரம்யகர்கட்டி, கர்க்காரு (சமஸ்கிருதம்) பேத்தா, பேத்தக்கடு (ஹிந்தி) டோரோபோட் (மணிப்பூரி) கோஹ்லா (மராத்தி) நீர் பூசணிக்காய் (தமிழ்) கும்பளங்கா (மலையாளம்) பூடிடா கும்மடிக்காயா (தெலுங்கு) பூடெகும்பலக்காயி, பூடு கும்பலா (கன்னடம்) கும்ரா, சல்கும்ரா (பெங்காலி) கோம்ரா (அசாமிசி)


புறத்தோற்றம் (Ash Gourd Meaning in Tamil)


முதிர்ச்சியடையாத வெண்பூசணி மெல்லிய ரோமம் போன்ற அமைப்புகளால் சூழப்பட்டிருக்கும். இது வெண்பூசணி பழுக்கும்போது மறைந்துவிடும். வெளிப்புற நிறம் அடர் பச்சை நிறத்திலிருந்து வெளிர் சாம்பல் நிறம் வரை மாறுபடும். முதிர்ந்த வெண்பூசணிக்காயின் மேல் ஒரு தனித்துவமான வெள்ளை சாம்பல் சூழப்பட்டிருக்கும். இந்த சாம்பல் பூச்சினால் இந்த பூசணிக்காயிற்கு ஆங்கிலத்தில் 'ஆஷ் கார்டு' என்று குறிப்பிடுகின்றனர். வெண்பூசணியின் வடிவம் வட்டம் மற்றும் நீள்வட்டத்திற்கு இடையில் மாறுபடும்.


சுவை மற்றும் பயன்பாடு:


வெண்பூசணியின் சுவை வெள்ளரிக்காய் போல மிகவும் மென்மையானது. பொதுவாக இதற்கு சொந்தமாக சுவை இல்லை, எனவே வெயில் அதிகமான நாட்களில் அனைத்து வகையான சாலடுகள், பழக்கூழ் மற்றும் பழச்சாறுகளில் சேர்த்துக்கொள்வது எளிது. குளிரான நாட்களில், வெண்பூசணியுடன் தேன் அல்லது கருப்பு மிளகு சேர்த்து பழத்தின் குளிரூட்டும் தன்மையை குறைத்து, அதேநேரத்தில் அதன் அடிப்படை சக்தியை தக்கவைத்துக் கொள்ளலாம். அதிகபட்ச உயிர் சக்தியைத் தக்கவைத்துக்கொள்ள, வெண்பூசணியை பச்சையாக சாப்பிட வேண்டும்.


வாங்குவதும் தேர்ந்தெடுப்பதும்:


இந்தியா, பங்களாதேஷ், தெற்கு சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பிற பகுதிகளில் வெண்பூசணி பரவலாக பயிரிடப்படுகிறது. ஆசியாவிற்கு வெளியே, உங்கள் உள்ளூர் பல்பொருள் அங்காடிகளில் வெண்பூசணி இல்லையெனில், பெரும்பாலான நகரங்களில் சீன சந்தைகள், இந்திய சந்தைகள் அல்லது சர்வதேச விவசாயிகளின் சந்தைகளில் இதை வாங்க முடியும்.

வெண்பூசணியைத் தேர்ந்தெடுக்கும்போது, சேதமடைந்ததற்கான அடையாளங்கள் அல்லது ஓட்டைகள் இல்லாத ஒரு பூசணிக்காயைத் தேர்ந்தெடுக்கவும். பூசணிப்பழம் அதன் அளவிற்கு ஏற்ப கனமாக இருக்க வேண்டும். மேலும், ஏறத்தாழ ஒரு தர்பூசணியின் அதே அளவு, வடிவம் மற்றும் நிறம் என வைத்துக்கொள்ளலாம். ஆனால், தனித்தன்மையாக வெள்ளை, சாம்பல் பூசப்பட்ட மேற்பரப்புடன் இருக்க வேண்டும். இந்த சாம்பல் சாப்பிட பாதிப்பில்லாதது, ஆனால் ஈரமாக இருக்கும்போது கைகளில் ஒட்டும். பூசணியை வெட்டுவதற்கு முன் அதை மேற்பரப்பிலிருந்து கழுவ வேண்டும். உட்புறம் ஒரு மிருதுவான மற்றும் சற்று கடினமாக வெண்மையாக இருக்க வேண்டும். வெட்டப்படாத, ஒரு வெண்பூசணிக் காயை ஒரு மாதம் அல்லது அதற்கு மேலாக, ஒரு குளுமையான உலர்ந்த இடத்தில் சேமிக்க முடியும்.


வெள்ளை பூசணியின் வரலாறுப் பின்னணி


இந்த காயின் வரலாற்று வேர்களைக் கண்டுபிடிப்பது சற்று கடினமாகிறது. இருப்பினும் ஜப்பான், இந்தோனேசியா, சீனா அல்லது இந்தோ-மலேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று தாவரவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த பிராந்தியங்கள் அனைத்திலும், வெள்ளை பூசணி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. வெண்பூசணியின் மருத்துவ குணம் பற்றிய விளக்கங்கள் கி.பி 5 முதல் 6ம் நூற்றாண்டு வரை சீன நூல்களில் காணப்படுகின்றன

பாரம்பரியமாக, இந்த காய்கறி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய வீடுகளுக்கு முன்னால் அது தொங்கவிடப்படுவதற்கான ஒரு காரணம் என்னவென்றால், நீங்கள் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்குள் நுழையும்போது, சில நேரங்களில் சில எதிர்மறை சக்திகள் இருக்கக்கூடும். எனவே அவர்கள் ஒரு வெண்பூசணிக்காயை தொங்கவிடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தினர். ஏனெனில், இது மிகவும் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்குகிறது, எதிர்மறையை அழிக்கிறது. இதை உங்கள் உடலுக்குள் போடுவது நல்லது என்று நினைக்கிறேன். இப்போது அதை உங்கள் வீட்டின் முன் வைப்பதற்கு பதிலாக, உங்கள் வயிற்றுக்குள் போட்டால், நீங்கள் நேர்மறை அதிர்வுகளின் மூலமாக மாறுவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும் எல்லாமே உங்களுடன் நன்றாக இருக்கும்.


வெண்பூசணியிலுள்ள ஊட்டச்சத்துகள்


வெண்பூசணி பிரதானமாக நீரினால் (சுமார் 96%) ஆனது, இது வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான நியாசின், தியமின் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளது. இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் மதிப்புமிக்க ஆதாரமாக வெண்பூசணி உள்ளது. இது போதுமான அளவு புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் உணவாகக்கூடிய நார்ச்சத்து ஆகியவற்றை வழங்குகிறது.



வெண்பூசணியின் பலன்கள்:




புத்திக் கூர்மை காலையில் ஒரு கிளாஸ் வெண்பூசணிச் சாறு குடித்தால் உடலில் பெரிய அளவில் குளிர்ச்சியை உணர்வீர்கள், அதேநேரத்தில் அது உங்களுக்கு விழிப்புநிலையையும் கொண்டுவருகிறது. வெண்பூசணியை தினமும் உட்கொள்வது உங்கள் அறிவுசார்ந்த திறன்களை பெரிதும் மேம்படுத்துகிறது. குறிப்பாக குழந்தைகள் வெண்பூசணிச் சாறு குடிக்க வேண்டும். நீங்கள் அதை ஒரு வாரம் குடித்தால், உங்கள் புத்தியின் கூர்மையில் ஒரு சிறப்பான மாற்றத்தைக் காண்பீர்கள். இது மிகுந்த பிராண சக்தி கொண்டது. ஒவ்வொரு நாளும், நீங்கள் காலையில் ஒரு கிளாஸ் வெண்பூசணிச் சாறு குடித்தால், அது உங்கள் புத்திசாலித்தனத்தில் அதிசயங்களை நிகழ்த்தும் என்பதை நீங்கள் காண்பீர்கள். உங்கள் புத்தி மிகவும் கூர்மையாக இருக்கும், மேலும் இது உடலமைப்பில் தூண்டுதல் இல்லாமல் சக்தியை வழங்குகிறது. வெண்பூசணியை தினசரி உட்கொள்வது உங்களுக்கு அற்புதங்களைச் செய்யும்.

மேம்பட்ட சக்தி வெள்ளைப் பூசணியை உட்கொள்வது ஏராளமான சக்தியைக் கொடுக்கிறது, அதேநேரத்தில் அது உங்கள் நரம்புகளை மிகவும் அமைதியாகவும் வைத்திருக்கிறது. நீங்கள் காபி குடித்தால், அது தூண்டுதலுடன் கூடிய சக்தியைத் தருகிறது. நீங்கள் ஒரு கிளாஸ் வெண்பூசணியைக் குடித்தால், அது உங்களுக்கு ஏராளமான சக்தியைத் தருவதோடு, உங்களை சாந்தமாகவும் வைத்திருக்கிறது.

மலச்சிக்கல், மூலநோய், கொப்புளங்கள்: நீங்கள் சிறிது வெள்ளைப் பூசணிச் சாற்றை உட்கொண்டால், அது உடலமைப்பை குளிர்விக்கும். மூலநோய் மற்றும் மலச்சிக்கல், சூட்டினால் உண்டாகும் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகளை உருவாக்கும் அதிக உடல் வெப்பம் உள்ளவர்களுக்கு, இது பலனளிக்கும்.






வெண்பூசணி பற்றிய அறிவியல் ஆய்வுகள் கூடுதல் ஆரோக்கிய பலன்களை எடுத்துரைக்கின்றன.


பட்டியல்

  • 2001ம் ஆண்டு ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறு எலிகளில் பரிசோதிக்கப்படும்போது, அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணின் வீரியத்தைத் தடுக்கின்றன. மேலும், இந்த சாறுகள் நஞ்சு இல்லாதவை என்றும் கண்டறியப்பட்டது.

  • 2005ம் ஆண்டு ஜர்னல் ஆஃப் எத்னோஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெள்ளைப் பூசணிக்காய் விதையின் சாறுகள் ஆண்ட்டி ஆஞ்சியோஜெனிக் எனப்படும் இரத்தக்குழாய் கட்டிகளை எதிர்க்கும் தன்மைகளைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. எளிமையாகச் சொன்னால், புற்றுநோய் கட்டிகளுக்கு இரத்தத்தை வழங்குவதை இது தடுக்கிறது.

  • 2000ல் ஃபிட்டோடெராபியாவில் வெளியிடப்பட்ட பூர்வாங்க ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறு எலிகளில் மார்பைன் மருந்து உட்கொள்வதை நிறுத்துவதால் ஏற்படும் அறிகுறிகளை கணிசமாக குறைக்கிறது. இதனால், ஓபியாய்டு போதை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை இந்த சாறு கொண்டுள்ளது.

  • ஜியாங்சு ஜர்னல் ஆஃப் அக்ரிகல்சர் சயின்ஸ் இதழில் 1995ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சிறுநீரக பாதிப்பு உள்ள எலிகளில் சோதிக்கப்படும் போது, வெள்ளைப் பூசணியிலுள்ள மூலப்பொருட்கள் சிறுநீரக பாதுகாப்புக்கான பலன்களை விளக்குகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.

  • ஈரானிய ஜர்னல் ஆஃப் பார்மகாலஜி அண்ட் தெரபியூட்டிக்ஸில் 2005ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, வயிற்றுப்போக்கு எதிர்ப்பு ஏஜெண்ட்டாக வெள்ளைப் பூசணி பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

  • இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மகாலஜியில் 2010ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணிக்காய் விதைகளின் மெத்தனாலிக் சாறுகள் அலர்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணத்தில் வலிமையாக செயல்படுவதைக் காட்டின.

  • தி கொரியன் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் 2003ம் வருட ஆய்வில், நீரிழிவு எதிர்ப்பு ஏஜெண்ட்டாக வெள்ளைப் பூசணி பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை உறுதிப்படுத்தியது: எலிகளில் பரிசோதிக்கப்படும்போது, இந்த காயின் பொடி குளுக்கோஸ், இன்சுலின், கொலஸ்ட்ரால், கொழுப்பு அமிலம் மற்றும் எச்.டி.எல்-கொழுப்பின் அளவுகளில் சரியான விளைவுகளை உண்டாக்கியது.

  • 2003ம் ஆண்டு இந்தியன் ஜர்னல் ஆஃப் ஃபார்மகாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெள்ளைப் பூசணி சாறுகள் எலிகளில் மன அழுத்த எதிர்ப்பு செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.


12 views0 comments